தொகுப்புகள்

Search This Blog

Saturday, February 22, 2020

ஆன்மீக அறிவியல்

இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும்.

சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும்.
இவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூடும்.

மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவர்தான். 

பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மையம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப் பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை  நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.

போலி அறிவியல் உருவாகக் காரணம் : நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான ‘சண்டை’ பல நூற்றாண்டுகால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் ‘குற்றவாளி’ என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரி தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர்.  ‘மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல்’ செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர். பாரதத்தை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு, கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம்.

மதத்தில் உள்ள கட்டுக் கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன் கதைகளில் பூமியைக் கடத்திக் கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள். பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில் நமது மதவாதிகள் அறிவியலால் தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படைவாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மதநிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல் பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.

இந்தப் போலி அறிவியலின் அடிப்படை எளிமையானது. அது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும், நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கோர்த்துவிடுவதுதான். இதன்படி மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். உதாரணமாக "இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அளவிட இயலாது என்கிறது அறிவியல் அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம்" இவ்வாறு வரலாறு உள்ள மனித கற்பிதங்களை இதுவரை தெரியாத அறிவியலுடன் முடிச்சுப்போடுவார்கள்.

இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதை கிளப்பி விடப்படுகின்றது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, மந்திரம் ஓதுவது, ஓமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோயில் சுற்றுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல் பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது. அந்தக் கதைகளின் மூலம் மீண்டும் மதநிறுவனங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன.

இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகளின் மூலம் இதனைச் செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் ‘அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை’, ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்’ என்றவாறு இருக்கும்.

அமெரிக்காவில் உள்ள நாசாவும், நமது திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் நாசாவிலேயே சொல்லிவிட்டார்களாம் என்பார்கள். இல்லையென்றால் திருமூலர் அப்பவே இதைச் சொல்லி வைத்துவிட்டு போய்விட்டார் என்பார்கள்.

ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போடுவார்கள். அணுவின் இயக்கத்திற்கும் நடராஜர் நடனத்திற்கும்கூட முடிச்சுப்போடுவார்கள். ‘காஸ்மிக் டான்ஸ்’ அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் ‘நடனம்’ ஆடுகின்றார் என்பார்கள். ஏன் நடராஜர் ஆடுவது டிஸ்கோ டான்சைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம் என்று நாம்கூட கூறிவிட்டுபோகலாம். கேட்பவர் சுயமாக யோசிப்பதே இங்கு முக்கியம். ஆதாரமற்ற எவற்றையும் புறந்தள்ளுவதே புத்திசாலித்தனம்.

எதிர்காலத்தைக் கணிப்பதற்கு, சுகமான வாழ்வு வாழ, செல்வவளம் பெற கைரேகை, ஜாதகம், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம், கிளி ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, மலையாள மாந்த்ரீகம், வாஸ்து சாஸ்திரம், பரிகார முறைகள், தனலட்சுமி எந்திரம், தாயத்து, பில்லி சூனியம், ஏவல் மற்றும் பல மரபு வழி முறைகள் நம்மைச்சுற்றி  இன்றும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றன.

மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை வைத்துத் தொழில் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் தர்மத்தை வைத்திருக்கின்றனர். அது என்னவெனில், ஒருவர் மற்றவரைக் குறை சொல்லக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.

எடுத்துக்காட்டாக ஜாதகம் கணிப்பவர், நியுமராலஜி அல்லது நேமாலஜி தவறான முறை என்று கூறுவதில்லை. கிளி ஜோசியம் பார்ப்பவர் அருகில் கைரேகை பார்ப்பவர் முறை தவறெனக் கூறுவதில்லை.

அதேபோல தங்கள் முறைதான் சரியானது, அறிவியல் பூர்வமானது, மற்ற முறைகள் தவறானவை என்று ஒருவர் மற்றவரை தொலைக்காட்சியில் பேசும் போதோ விவாதங்களின் போதோ காட்டிக் கொடுப்பதில்லை. ஆனால் நாடி ஜோதிடத்திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு எதிரானவர்கள். மூடநம்பிக்கையை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள். எனவே இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

ஒவ்வொருவரும் இந்த ஆன்மீகத்தில் அறிவியல் உள்ளது என்று ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்களை இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது. 

நன்றி:- வேணுகோபால சங்கர்

Monday, February 10, 2020

தமிழரின் மதம் என்ன?

தமிழரின் மதம் என்ன? 

தமிழர்தான் இந்து, இந்துதான் தமிழர் என்று சில பிதற்றல்கள் அதிகமாகிவரும் நிலையில் இந்த பதிவு அவசியமாகிறது.

தமிழர் நாகரிகம் என்பது மிக பழமையானதும், மேம்பட்ட பண்பாட்டு கலாச்சாரத்துடன் வாழ்ந்த இனமாக இருந்துள்ளது என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளது.

ஆனால் தமிழர்களின் உண்மையான மதம் எது என்பது பற்றி பெரும்பாலானோர் தெரிந்திருக்கவில்லை அல்லது புரிந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ள கடவுள் பாசம் அவர்களிற்கு இடங்கொடுப்பதில்லை. பலர் இந்துமதம் என்றும் குறிப்பாக சைவம் தான் தமிழர்களது மதம் என்று நம்புகிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் அரைகுறை புரிதல் உடையவர்கள் என்பதுதான் உண்மையாகும். கருத்தில் முரண்படுபவர்கள் ஆதாரபூர்வமாக விவாதிக்க வரலாம். 

உண்மையில் இந்து மதம்(வைதீகம்/சண்மதம்/சனாதனம்) என்பது தமிழர் மதம் இல்லை. இது ஆரிய பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டு தமிழர்களிடம் இடைகாலத்தில் திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. எடுத்துக்கூறியும் புரியாதவர்கள் இந்து வழிபாட்டில் சமஸ்கிருதம் ஏன் என்பதற்கு விடையை கூறட்டும். 

சிவனை முழுமுதற் கடவுளாக கொண்ட சிவவழிபாடு ஏறத்தாழ கி.பி ஏழாம் நூற்றாண்டில் தான் மதமாக உருவாக்கப்பட்டது. நாயன்மார்கள் சமய குரவர்கள் சைவ புராணங்கள் எல்லாம் தோன்றியது இந்த காலப்பகுதிகளில்தான். அதற்கு முன்பு இருந்தே ருத்ரன் என்று ஆரியர்கள் வழிபட்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழர்களிற்கு மதமாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த காலப்பகுதியில்தான். கி.மு 7ம் நூற்றாண்டுகளிற்குபிறகு தென்னிந்தியா வந்த பார்ப்பனர்கள் கி.பி 4ம் நூற்றாண்டில் வடக்கில் குப்தர்கள் ஆதிக்கம் செலுத்தும்வரை பெரிதாக தமிழகத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. குப்தர்கள் காலத்தில்தான் புராண இதிகாசங்கள் சமஸ்கிருதத்தில் எழுத்துரு பெறுகின்றது.. அதன்பின்புதான் இந்துமதம் வேகமாக வளர்கின்றது.

தமிழரின் சங்க இலக்கியங்களில் (கி.மு 4ம் நூற்றாண்டிற்குமுன்) எங்கேயும் சிவனையோ மற்ற இந்து கடவுள்களையோ தமிழர் வழிபட்டதாக எந்த செய்தியும் இல்லை. வேண்டுமானால் இன்னொரு பெயரை இன்னொரு பெயரோடு தொடர்புபடுத்த வேண்டுமானால் செய்வார்கள். உதாரணமாக மாயோன்தான் கிருஷ்ணன் என்றும் சேயோன்தான் முருகன் என்பதுபோன்றும். இன்றைக்கு திருக்குறளில்கூட இந்துக்கடவுளரின் பெயர்களை முடிச்சுப்போட ஆரம்பித்துவிட்டார்கள்.

சங்க காலத்திற்கு பின்பு சங்கம் மருவிய காலம் கி.மு 100 - கி.பி 600 நூற்றாண்டளவில் ஆசிவகம், சமணம், பௌத்தம் போன்றவை தமிழகதில் செழிப்புடன் வளருகின்றது. இவையும் வடக்கில் இருந்துதான் வந்ததாக இருந்தாலும் இம்மதங்கள் தோன்ற மூலவேராக இருந்த மெய்யியல் கருத்துக்களில் பெரும்பாலும் தமிழர்களின் மெய்யியல் சிந்தனையே ஆகும். (ஆசீவகம் வடக்கில் இருந்துதான் வந்ததா அல்லது இங்கேயே உருவாகியதா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. தெரிந்தவர்கள் ஆதாரபூர்வமாக விளக்கினால் உதவியாக இருக்கும்)
இருப்பினும் இம் மதங்கள் வலியுறுத்தும் கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் தமிழர்களிடம் திணிக்கப்பட்ட ஒன்று.

தமிழர்கள் ஏதாவது ஒரு வகையில் புலால் உண்ணுபவர்களே, தங்கள் தேவைக்கும், சூழ்நிலைக்கும் (அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) ஏற்றவாறு மாமிசம் சாப்பிடும் பலி கொடுத்தும் வந்துள்ளனர் என்பதும் இலக்கிய நூல்களில் உள்ளது, இவை பாவத்திற்குறிய செயல்களாக கருதப்படவில்லை.

தமிழ் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் பழமை வாய்ந்த நூலான தொல்காப்பியத்தில் நடுகல் வழிபாடு மற்றும் திணை நிலம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய சங்க கால நூலாகும். 

நடுகல் வழிபாடு என்பது முன்னோர்களின் (வீரமரணம் அல்லது முன்னோர்களில் சிறந்தவர்கள்) நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது. இவையே பின்நாட்களில் குலதெய்வ வழிபாடாகவும் மாறியது.

மேலும் தொல்காப்பித்தில்..

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

என்று அக்கால தமிழர்கள் மதசார்பற்று இயற்கையோடு இசைந்து வாழ்ந்துவத்துள்ளனர் என்று கூறுகிறது. இதைதவிர மதம் என்ற ஒன்று தமிழர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

இதுவே பின்நாட்களில் ஆரிய புராண இதிகாசக்களில் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற மூதாதையர்களை முருகன், விஷ்ணு, இந்திரன், வருண பகவான் என்பதுபோல் ஒன்றுடன் ஒன்றை முடிச்சுப்போட்டு மாற்றப்பட்டுள்ளது. ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போட்டு தமிழரை அழிக்க தமிழரின் கலாச்சாரத்தையே பயன்படுத்தும் ஆரிய முறை. இதுதான் உள்வாங்கி செரித்துக்கொள்ளும் ஆரிய முறை. சங்ககால தமிழ் மக்கள் வாழ்விற்கும் இன்றுள்ள இந்து கடவுள்களிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உள்ளது என்பவர்கள் சங்க இலக்கியங்களில் இருந்து இந்த கடவுளர்களின் பெயரை ஒருமுறை காட்டிவிடவும். சேயோன்தான் ஸ்கந்தன் மாயோன்தான் விஷ்ணு எனும்வேலை வேண்டாம். 

இதுமட்டுமின்றி தொல்காப்பியத்தில் பல்வேறு மெய்யியல் சார்ந்த கருத்துக்களும் உள்ளது.
இவ்வாறு மெய்யியலை உணர்ந்து, இயற்கையின் தன்மையை அறிந்து வாழ்ந்த தமிழர்களின் மெய்யியல் தேடலில் உருவானதே பல கண்டுபிடிப்புகளான மருத்துவக்கலை, தற்காப்பு கலை, அறிவியல், இசை, இலக்கணம் மேலும் பல. ஆனால் இன்று ஆரிய மதம் எனும் வலையில் சிக்கி மெய்யியலை மறந்து சாதிகளாக பிரிந்துகிடக்கிறோம். சாதி வைத்திருந்தால்தான் அவன் தமிழன் என்பதுபோல் சில அரசியல் வியாதிகள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக உருவாகியுள்ளார்கள். இது மீண்டும் ஆரிய மாயைக்குள் சிக்கும்செயல்.

மீண்டும் பழந்தமிழரின் மெய்யியல் வாழ்கையை பின்பற்றி வந்தால் அறிவையும், மனதையும், உடலையும் செழுமைபடுத்தி இவ்வையுலகம் வியக்கும் வகையில் சாதி மதம் கடவுள் அற்று வாழ்வோம் என்பதே மறுக்க முடியாத உண்மை. அதற்கு தமிழருக்கு தமிழர் என்றால் யார் அவன் உண்மையான அடையாளம் என்ன என்பது புரியவேண்டும். 

ஆரியர்கள் எவ்வாறு தமிழரை உள்வாங்கி செரித்துக்கொண்டார்கள் என்பதுபற்றிய விரிவான பதிவு ஏற்கனவே எமது குழுவில் இட்டுள்ளேன். அதையும் பாருங்கள்.

 நன்றி :- வேணுகோபால் சங்கர்

Sunday, February 2, 2020

யார் தமிழன்? யார் திராவிடன்? யார் ஆரியன்?

யார் தமிழன்? யார் திராவிடன்? யார் ஆரியன்?

இவை நமது வரலாறு. தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன். இக்கட்டுரையில் ஆரியர் வருகையையும் அவர்கள் எவ்வாறு இங்கிருந்தவர்களை ஆதிக்கம் செய்து அவர்கள் சுயத்தையே அழித்தார்கள் என்பதையும், தமிழனின் அடையாளம் என்ன என்பதையும் மிக சுருக்கமாக விபரிக்கலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

ஆரியர் எனப்படுபவர்கள் கி.மு 1500 ஆண்டுகளிற்கு முன் இன்றைய இந்தியாவின் மேற்கு பக்கமிருந்து அதாவது தற்போதைய ஈரானிலிருந்து  கைபர் கணவாய் ஊடாக இந்திய நிலப்பரப்பிற்குள் வந்தவர்கள் ஆவர். ஈரான் என்றால் பாரசீக மொழியில் ஆரியர்கள் நிலம் என்று பொருள்படும். ஆரியர்கள் அக்கினியை வழிபட்டவர்களாவர். 

ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பிற்குள் வரும்போது இங்கே பல இனக்குழுக்கள் இருந்தன. அவற்றில் முக்கியமாக கிராதர் என்ற இனக்குழு இமய மலை சாரலில் சிவனையும் இந்திரனையும் கடவுளாக வழிபட்டு வந்தார்கள். ரிக் வேதத்தில் இவர்களுக்கு இடையேயான போர்களைபற்றிய குறிப்புகள் உள்ளது. 

ஆரியர்கள் பொதுவாக எதிர்ப்பவரையும் உள்வாங்கி செரித்துக்கொள்ளும் வல்லமை பெற்றவர்கள். கிராதர்களின் கடவுள்களையும் உள்வாங்கி அதற்கு வேள்விகள் பண்ணி தருகிறேன் என்று அக்கினி வளர்த்து அவன் சுய அடையாளத்தை அழித்து இவன் தனக்கு வேண்டியதை சாதித்துகொண்டான். இவ்வாறு ஒவ்வொருவரினதும் அடையாளங்களிற்குள் கலந்து அவர்களின் சுய அடையாளங்களை அழிப்பதில் வல்லவன். இதற்கு அவனுக்கு பயன்பட்டது கடவுள் என்ற மாயை. இவன் மந்திரங்கள் தனக்கு தெரியும் அதன்மூலம் கடவுளுடன் பேச முடியும் நான் பேசி உங்களுக்கு கடவுள் சொன்னதை சொல்கிறேன் என்று வசதியாக உட்கார்ந்துகொண்டான். இன்றைக்குகூட சிலர் சமஸ்கிருதம் தேவ பாஷை என்பதை பார்த்திருப்பீர்கள். இதுதான் அது. 

இவ்வாறு அவன் கடவுளின் பிரதிநிதியாக உட்கார்ந்து விட்டதால் அவனுக்கு தான் நினைத்ததை அந்த மக்களிடையே செய்யக்கூடியவாகவும் அவனை உயர்ந்தவனாக மக்கள் பார்க்க ஏதுவாகவும் இது அமைந்தது. இதே உத்தியைதான் மற்ற மதங்கள் பின்நாளில் கடவுளின் தூதர்கள் என்ற பெயரில் செய்தது.

இவ்வாறு அவன் சமுதாயத்தில் உயர்ந்தவனாக உட்கார்ந்து விட்டபடியால் அவனால் இலகுவாக பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரிக்கமுடிந்தது. பிரிவினையே அவன் பலம். இன்றும் அதையே கையாள்கிறான். நாடாளும் மன்னர்களுக்கு மேலேயே தான் உயர்ந்த சாதியாக இருப்பதால் சிலவேளை மன்னர்களால் தனக்கு தீங்கு வரலாம் என்று பயந்த அவன், அதற்கும் பிரம்மகத்தி தோஷம் போன்ற கட்டுகதைகளை கடவுள் பெயரால் கூறி மக்களிடத்தே ஒரு பீதியை உண்டுபண்ணினான். அதாவது யாராவது பிராமணனுக்கு தீங்கிழைத்தால் அவர்களுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை.

சூத்திரர் தாழ்த்தப்படுவதும், அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தனக்கு தீங்கு ஏற்படலாம் என்று பயந்த அவன், சூத்திரர்களுக்குள்ளும் கிளை சாதிகளாக பிரிவினையை உண்டுபண்ணி அவர்களிற்குள் ஒற்றுமையை குலைத்து தான் தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டான். பல மூடநம்பிக்கைகளை மக்களிடத்தில் விதைத்து தான் இருந்த இடத்தில் குளிர் காய்ந்தான். தான் கூறுவதே வேத வாக்கு என்ற நிலைக்கு கொண்டுவந்தான். மன்னர்களுக்கே அறிவுரை வழங்கும் இடத்தில் உட்கார்ந்துகொண்டான்.

இவ்வாறு படிப்படியாக இவன் ஒவ்வொரு இனக்குழுவையும் உள்வாங்கி செரித்துகொண்டு, அவர்கள் சுய அடையாளங்களை அழித்துகொண்டு அவனது கலாச்சாரத்தை திணிப்பதில் வெற்றிகண்டான்.

இவ்வாறு வடக்கே ஒவ்வொரு இனக்குழுக்களாக உள்வாங்கி செரித்துகொண்ட அவன் தெற்கிலும் அதே நடைமுறையை பின்பற்றினான்.

தெற்கில் திராவிடர்கள் அதாவது இன்று தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் வசித்து வந்தார்கள். இங்கே அவன் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றபோதும் அது கி.பி 400 குப்தர்கள் காலம்வரை இங்கே அவனால் பெரிய அளவில் காலூன்ற முடியவில்லை. 

குப்தர்கள் காலத்திலேயே சமஸ்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றது. பாடப் புத்தகத்தில்கூட குப்தர்கள் காலம் பொற்காலம் என்றுதான் குறிப்பிட்டு கேள்வியை கேட்பார்கள். யாருக்கு பொற்காலம்? ஆரியருக்கு பொற்காலம். திராவிடருக்கு?

திராவிடர் என்று குறிப்பிடும்போது திராவிடரில் மூத்தவன், திராவிட மொழி்களின் மூலமொழி தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழனையும் யார் என்று பார்க்க வேண்டும். நாம் தமிழர் ஆதலால் திராவிடர்களான மற்றைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவற்றின் வரலாற்றிற்குள் போகாமல் தமிழனுக்கு என்ன நடந்தது என்பதிற்குள்ளேயே போகிறேன்.

தமிழன் இயற்கையை வழிபட்டு வந்தான். இறந்துபோன தனது மூதாதையர்களை காவல் தெய்வங்களாக நடுகல் வைத்து வழிபட்டுவந்தான். ஐந்திணை நிலங்களைான மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சியில் சேயோனையும், காடும் காடு சார்ந்த இடமான முல்லையில் மாயோனையும், குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடைப்பட்ட தரிசு நிலத்தை பாலை என்றும், வயலும் வயல் சார்ந்த இடமான மருதத்தில் வேந்தனையும், கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலில் வருணனையும் வழிபட்டு வந்தான்.

இதில் உன்னிப்பாக கவனிக்கவேண்டிய விடயம் இந்த மாயோன் இன்று விஷ்ணுவாகவும், சேயோன்தான் முருகன் என்றும், வேந்தன் இந்திரனாகவும், வருணன் வருண பகவான் என்று மழையுடனும் தொடர்புபடுத்தி ஆரியனின் கலாச்சாரத்தை தமிழனில் திணிக்க தமிழரின் கலாச்சாரங்கள் பயன்படுகின்றன. 

இவற்றை நம்பவைக்க இங்குள்ள நிலப்பரப்புகளைவைத்து புராண இதிகாச கதைகளை தமிழர்களுக்கு தமிழிலேயே இயற்றி, (இன்றைய சினிமா எடுப்பதுபோல) அதில் ஆரிய கலாச்சாரத்தை போதித்து அதன் மூலம் தமிழனின் பாரம்பரியத்தை அழிக்கும் செயலை செய்தான். இதுவே உள்வாங்கி செரித்துக்கொள்ளும் ஆரியனின் முறை. 

முன்னொரு காலத்தில் இங்கே சூரன் என்ற அசுரனுடன் ஸ்கந்தன் என்கிற சேயோன் போரிட்டான் என்பதுமாதிரியான கதைகளும், சேயோனை ஸ்கந்தனைாக்கி அவனை வினாயகனின் தம்பியாக்கி, சிவன் பார்வதியின் பிள்ளையாக்கி, அதன்பின்னும் அவனை மாம்பழ கதைபோல் ஒன்றை உருவாக்கி மூடனாக்கி காட்டுவது. எல்லாவற்றிற்கும் கடவுள் சாயம் பூசி கேள்வி கேட்காதவாறு மூளையை மழுங்கடிப்பது. இதில் அவன் வெற்றியும் பெற்றுவிட்டான். 

இவ்வாறு எல்லா வழிகளிலும் தனது ஆதிக்கத்தை பரப்பியவன். தமிழ் மன்னர்களை கொண்டே தனக்கு இசைவாக ஆலயங்களை அமைத்துகொண்டான். அதைக்கொண்டு சமஸ்கிருதத்தையும் அவன் கலாச்சாரங்களையும் தமிழனில் திணித்துவிட்டான். அங்கே தனக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் இருந்த இடத்திலேயே கிடைக்ககூடியவாறு ஏற்பாடுகளை செய்துகொண்டான். அர்ச்சனைதட்டு, உண்டியல், பரிகாரம், நைவேத்தியம், தேவதாசி என்று பட்டியல் நீளும். 

பார்ப்பனனின் மனுதர்ம சட்டத்தை கடவுளின் சட்டம் என்று நம்பிய பல முட்டாள் தமிழ் மன்னர்கள் இங்கே இருந்ததால்,
பார்பனன் கூறுவதை தலையாய பணியாக செய்து முடித்தனர்.
எதிர்த்த சமணர்களை கழுவேற்றி கொல்லவும் தயங்காதவனாக இருந்தான்.

இவ்வாறு தமிழன் சுயத்தை இழந்து இருந்தபோது ஆங்கிலேயரும் அரேபியரும் வந்து மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி உளக்கியதுபோல் அவர்களும் தமது பங்கிற்கு அரேபிய, ஆங்கிலேய கலாச்சாரங்களை தமிழனில் திணித்து தமிழனை சுய அடையாளம் அற்ற பரதேசியாக ஆக்கிவிட்டனர்.

இந்த நிலைதான் இன்றும் தொடர்கிறது. இந்த தமிழன் இன்னும் திருந்தியபாடில்லை. தான் யார் என்பதே தெரியாமல் ஆரிய சமஸ்கிருத கடவுள்களிற்கு வக்காலத்து வாங்குபவனாகவும், அரேபிய அல்லாவிற்கு வக்காலத்து வாங்குபவனாகவும், வத்திக்கான் கர்த்தருக்கு வக்காலத்து வாங்குபவனாகவும் இருந்து வருகிறான். 

தமிழன் என்று கூறுபவர்கள் தங்களின் அடையாளம் என்ன என்பதை உணரவேண்டும்.

கருத்துக்களை வரவேற்கிறேன்.
 நன்றி  :- வேணுகோபால சங்கர்