சமுக உறவில் தேடுங்கள்

Loading

Saturday, July 8, 2017

கலைஞர் வாரிசு

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியின் செயல்பாடுகள், அவரது முதுமையின் காரணமாக முடக்கப்பட்டிருக்கின்றன. தான் பேசாவிட்டாலும் தன்னைப் பற்றி பேசவைப்பவர் கருணாநிதி என்பது இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்யும் நொடியிலும், இதோ நீங்கள் வாசிக்கும் நொடியிலும் நிறுவப்பட்ட உண்மை.

அப்படிப்பட்ட கருணாநிதிக்கு எதிரியாக இருப்பதுகூட எளிது. ஆனால், அரசியல் வாரிசாக இருப்பது என்பது மிகவும் கடினமான செயல். அந்த கடினத்தைதான் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கடுமையான சவால்களைச் சந்தித்து கடந்து வருகிறார் மு.க.ஸ்டாலின். திமுக-வின் செயல் தலைவராக அவர் பொறுப்பேற்ற நிலையில்தான் ஜெயலலிதா மரணம், அதிமுக மிக குறைந்த அளவான மெஜாரிட்டியில் கம்பி மேல் நடக்கும் ஆட்சி என்று திமுக-வுக்கான சாதகங்கள் அதிகரித்து வருகின்றன.

‘இந்நேரம் கலைஞர் செயல்பாட்டோடு இருந்திருந்தால்…’ என்று பலரும் அப்போதிலிருந்து இப்போது வரை பேசிவருகிறோம். அவர்களின் வாயை கலைஞரின் சட்டப்பேரவை வைர விழா மூலம் சற்று வலிமையாகவே அடைத்திருக்கிறார் ஸ்டாலின்.

தேசியத் தலைவர்களைச் சென்னைக்கு அழைத்து ஒருங்கிணைத்து பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் செய்ய வேண்டிய ஓர் ஒருங்கிணைப்பை பிராந்திய கட்சியான திமுக-வின் சார்பில் செய்தார் மு.க.ஸ்டாலின். நிதிஷ்குமார், சுதாகர் ரெட்டி, ராஜா போன்றவர்களுக்கு ஸ்டாலினைப் பாராட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை. ஆனாலும் அவர்கள் அந்த விழாவில் ஸ்டாலினை வெகுவாகவே பாராட்டினார்கள். தேசிய அளவிலான தனது கடமையில் இருந்து சற்று தள்ளியே இருந்த ஸ்டாலின், கருணாநிதியின் வைர விழா மூலம் தேசிய அளவிலான மாற்றத்துக்கான புள்ளியைத் தொடங்கி வைத்தார்.

கருணாநிதியின் இல்லத்து வாரிசு மட்டுமல்ல… இயக்கத்தின் வாரிசாகவும் ஆகிப்போன ஸ்டாலினுக்கு அந்த வாரிசு என்ற நிலையே சாதகமும் பாதகமும். தனது புதிய பாணி ஒன்றை வகுத்து செயல்படத் தொடங்கினால் கூட... ‘அவங்க அப்பா போல வரமாட்டாரு’ என்ற விமர்சனம் வரும்.

கருணாநிதியின் அடையாளங்களை மெல்ல மெல்ல ஸ்டாலின் பெற்று வருகிறாரா இல்லையா என்பதை நல்ல விவாதமாக நடத்தலாம். அதற்கு அப்பாற்பட்டு இன்று காலத்தால் ஸ்டாலினுக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கறுப்புக் கண்ணாடி.

கண் புரை பிரச்னைக்கான மருத்துவமனைச் சென்று சாதாரணமான அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு சட்டமன்றத்துக்கு வந்த ஸ்டாலினை திமுக-வினர் ஆசை ஆசையாக பார்த்தனர்.

காரணம்… தன் தந்தையைப் போல கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார் ஸ்டாலின். சில சட்டமன்ற உறுப்பினர்கள், ‘தளபதியை பார்த்தா தலைவரே சட்டமன்றத்துக்கு வந்ததுபோல இருக்குல்லே?’ என்று பேசிக் கொண்டனர்.

1953ஆம் ஆண்டு இப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா பொதுக்கூட்டம். அதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து அன்று மாலை மூன்று மணிக்குக் காரில் புறப்பட்டார். குறித்த நேரத்தில் பரமக்குடி போய்ச் சேர வேண்டுமே என்பதற்காக கார் சற்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகில் சென்று கொண்டிருந்தபோது, கொம்பு நீளமாக உள்ள ஒரு கொடி ஆடு காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால், கார் பழுதாகி, வேறொரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு பரமக்குடிக்குப் புறப்பட்டார் பரமக்குடியில். இரவு ஒரு மணிக்குக் கூட்டம் முடிவுற்றது. மறுநாள் திருச்சி தேவர் மன்றத்தில் சிறப்புக் கூட்டம். அதனால் உடனே திரும்பினார். திரும்பும்போது அசதியின் காரணமாக வாடகைக் காரை ஓட்டிய ஓட்டுநர் சற்றுக் கண்ணயர்ந்து விட்டார்.

திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதிக்கு அருகில் கார் மைல் கல்லில் மோதி, மைல் கல்லும் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதிக் கொண்டு நின்றது. கருணாநிதியின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. First aid எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்து கொண்டு திருச்சி வந்து சேர்ந்தார். மறுநாள் காலையில் முகமே வீங்கி, கருணாநிதியின் இடது கண்ணில் வலி தொடங்கியது.

வலியோடு திருச்சி நிகழ்ச்சியிலும், கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சென்னை திரும்பிய கருணாநிதியை, நண்பர் முல்லை சத்தி பிடிவாதமாக வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே மருத்துவர் சோதித்துப் பார்த்துவிட்டு, இடது கண்ணுக்குள் ஒரு சிறு நரம்பில் கீறல் ஏற்பட்டிருப்பதாகவும், குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது எழுதவோ, கூட்டங்களில் பேசவோ, படிக்கவோ கூடாது என்று கூறினார். அது எப்படி சாத்தியமாகும்? கருணாநிதியோ கண்ணைவிட தன் கடமைகளுக்கே முக்கியத்துவம் தந்தார்.

வாக்குக் கொடுத்தபடி, சென்னையில் ஓட்டல் ஒன்றில் ‘மணி மகுடம்’ நாடகத்தின் கடைசி காட்சிகளை எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று அதே இடது கண்ணில் கடுமையான வலி. கையில் இருந்த பேனாவையும், தாளையும் வீசி எறிந்து விட்டு, ‘அய்யோ’ என்று அலறினார். சென்னையில் மிகச் சிறந்த மருத்துவர் முத்தையா வந்து பார்த்துவிட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றார். பன்னிரண்டு முறை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது கருணாநிதியின் அந்த ஒற்றைக் கண்ணில்.

1967ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் கார் விபத்து ஒன்றில் சிக்கி, கண்ணில் ஏற்கனவே இருந்து வந்த வலி மேலும் அதிகமாயிற்று.

1971ஆம் ஆண்டிலும் அந்த வலி தொடர… இந்தியாவிலே உள்ள மிகச் சிறந்த கண் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின்பேரில், அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் நகரில் உள்ள ‘ஜான்ஹாப்கின்ஸ்’ மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் மாமுனி என்பவர் கருணாநிதிக்குக் கண்ணில் அறுவை சிகிச்சை செய்து, கறுப்புக் கண்ணாடியை தொடர்ந்து அணியச் செய்தார்.

இப்படி கருணாநிதியின் கறுப்புக் கண்ணாடிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இதை அவரே முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதமாகவும் எழுதியிருக்கிறார். கருணாநிதியின் இடது கண் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் அவரது இடதுசாரிப் பார்வை கெட்டுப் போகவில்லை.

இதோ… மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியும் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு நான் சட்டமன்றம் செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தோடு சட்டமன்றம் சென்று அதிமுக அரசின் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மீறல்கள் முதல் குட்கா ஊழல் வரை பேசி எதிர்க்கட்சித் தலைவரின் கடமையாற்றியிருக்கிறார் ஸ்டாலின்.

கருணாநிதிபோல யாரும் இனிமேல் வர முடியாது என்பது உண்மைதான். நாம் ஸ்டாலினிடம் கருணாநிதியை எதிர்பார்க்கக் கூடாது என்பதே நியாயம். ஆனாலும், ஸ்டாலினின் முகப் புத்தகத்தில் கறுப்புக் கண்ணாடி போட்ட புகைப்படத்தைப் பார்த்து, ‘தளபதி… தலைவரைப் போலவே மாறிவிட்டார்’ என்று பல உடன்பிறப்புகள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

கருணாநிதியின் கறுப்புக் கண்ணாடிக்குள் சமூக நீதிப் பார்வை இருந்தது. பெண்ணுரிமைக்கான புதிய பார்வை இருந்தது. மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத உறுதிப் பார்வை இருந்தது. மத நல்லிணக்கத்துக்கான கருணைப் பார்வை இருந்தது.

ஸ்டாலினின் கறுப்புக் கண்ணாடிக்குள்ளும் அந்த பார்வைகள் நிச்சயம் இருக்கின்றன. இன்னும் அது வீச்சாக வெளிப்பட வேண்டிய தேவையும் இப்போது எழுந்திருக்கிறது.

மாநில உரிமைகள் மறுக்கப்படுவதும், மானத் தமிழ்மொழி ஒதுக்கப்படுவதும் அன்றைக்கு இருந்ததைவிட இன்றைக்கு தீவிரமாகியிருக்கும் நிலையில், இந்தக் கறுப்புக் கண்ணாடியின் பொறுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதே வரலாறு சொல்லும் செய்தி.

கறுப்புக் கண்ணாடி என்பது ஒரு குறியீடுதான். ஆனால் அது சரித்திரத்தின் குறியீடு!

- ராகவேந்திரா ஆரா

No comments:

Post a Comment