Friday, December 9, 2011

திராவிட கலாச்சார மீட்டெடுப்பு


ஆரிய மாயை – சில உண்மைகள்…! (பகுதி – 2)

19 மற்றும் 20 – ம் நூற்றாண்டுகளில் நடந்த சில மறுமலர்ச்சிகளால் தமிழ் தன் இழந்த பெருமையை எல்லாம் திரும்பப் பெற்றது. காலங்களைக் கடந்து வாழும் ஒரு மொழியும் கலாச்சாரமும் என்றும் அழிக்கபடுவதில்லை. சில காலம் மறைத்து வைக்கப்படுவதுண்டு. ஆனால், அம்மொழியானவள் தன்னை வெளிப்படுத்த தலைசிறந்த மகன்களை தானே பெற்றெடுப்பாள். தமிழ்த்தாயும் அங்ஙனமே. முதலில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்த சிலர், தமிழரின் மொழி வளத்தை கண்டு இங்கு தங்கி தமிழ்ச்சேவை புரிந்தனர். கால்டுவெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர் ஆகியோர் அப்படித்தான். தமிழ் மக்கள் பலர், தமிழின் பெருமைகளை உணரத்துவங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டு முடிவிலும், பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், பல சங்க கால தமிழிலக்கியங்கள் வெளிக்கொணரப் பட்டன. தஞ்சை மாவட்டத்தின் பல சிற்றூர்களில் பல அந்தணர்களின் வீட்டுப் பரணில் உறங்கிக் கிடந்த இந்த தமிழ் நூல்கள் யாவும் உ.வே சாமிநாதன், தாமோதரன் பிள்ளை, ஆகிய பெரியோர்களால் வெளியே கொண்டுவரப் பட்டு பதிப்பிக்கப்பட்டன. தமிழ் ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த இலக்கியங்களைக் கொண்டிருந்ததை நாம் அறிந்து கொண்டோம்.
பின்னர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் மிக முக்கியமான மாற்றாங்கள் நடந்தேறின. இரண்டு தலைசிறந்த மனிதர்கள் தமிழையும், திராவிட கலாச்சாரத்தையும் மீட்டெடுத்தனர். அவர்கள், மகாகவி பாரதியும், தந்தை பெரியாரும் தான். பாரதியார், தேனின் இனிய தமிழ்க் கவிதைகளை வடித்தார். மிகச் சிறிய வயதில், எளிய இனிய கவிதைகளை எழுதினார். மிகப் பெரும் சமூக மற்றும் மொழியியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். ஆரிய மாயையை தமிழனுக்குச் சுட்டிக் காட்டினார். சாதி, மத, இன பேதங்களைச் சாடினார். பெண்ணடிமையை இடித்துரைத்தார். சொல்வதோடு நின்று விடாமல் வாழ்ந்தும் காட்டினார். தன் அக்ரகாரத்தில் சூத்திரனை அழைத்துச் சென்றார். தன் மனைவியை சமூக நிகழ்ச்சிகளுக்கு கூட்டிப் போனார். அவர் ஒரு மாபெரும் மனிதப் பிறவியானார். நம் துரதிருஷ்டம் அவரால் நீண்ட நாள் வாழ இயலவில்லை.
அடுத்து தந்தை பெரியார். தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்த ஈரோட்டுப் பெரியார், திராவிடர்களின் தனித்தன்மையை அவர்களுக்கு உணர்த்துவதில் பெரிய அளவில் வெற்றி பெற்றார். தமிழ் தனித்தன்மை பெற்று பெருமையுறுவதைக் கண்ட ஆரிய ஆதிக்க சக்திகள், அதற்கு ஒரு வழி கண்டறிந்தன. சமஸ்கிருதத்தின் வழித்தோன்றலான இந்தி மொழியை இந்தியாவெங்கும் பரவச் செய்வது தான் அது. 1935-ம் ஆண்டு சென்னை மாகாணத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும், ராஜாஜி முதல்வரானார். கட்டாய இந்தி கல்வித் திட்டம் கொண்டு வந்தார். அதன் படி, இந்தி மொழிப் பாடம் கட்டாயமாக்கப் படும். அனைத்து வகுப்பு மாணவர்களும் இந்தி மொழியைப் படிக்க வேண்டும். ஒரு இனத்தின் மீதும், சமூகத்தின் மீதும் நடத்தப் பட்ட இந்த திணிப்பைக் கண்டு பெரியார் வெகுண்டெழுந்தார். பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்தி மொழியை திணிப்பதை உடனே நிறுத்த வேண்டுமென அவர் போராடினார். இருந்தாலும் ராஜாஜி நிறுத்துவதாயில்லை. எப்படியோ ஒருவழியாக 1942-ம் ஆண்டு ஆங்கில கவர்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த சட்டத்தை நீக்கினார். 

அந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும் கூட, இந்திய சுதந்திரத்துக்குப் பின் நேருவும், காந்தியும் கலந்து பேசி, இந்தியா முழுமைக்கும் ஒரு பொது மொழி இருக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன் படி 15 ஆண்டுகள் இந்தியும், ஆங்கிலமும் நாட்டின் மொழியாக இருக்கும். அதன் பிறகு ஆங்கிலம் அறவே ஒழிக்கப்பட்டு இந்தி மொழி மட்டுமே நாட்டின் தேசிய மொழியாக இருக்கும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்தனர். சுதந்திரத்துக்குப் பின் 1962-ம் ஆண்டு அலுவல் பணிச்சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு ஆங்கிலப் புழக்கம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், 1965-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கா.ந.அண்ணாதுரை, இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டத்தை துவக்கினார். அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் இந்தப் போராட்டத்தை ஒடுக்கினார். இந்தியப் பிரதமராயிருந்த சாஸ்திரி அவர்களும் உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தாவும் இந்தியை தேசிய மொழியாக்குவதில் உறுதியாய் இருந்தனர். சென்னை மாகாணத்திற்குட்பட்ட காங்கிரசார் காமராஜர், நீலம் சஞ்சீவ ரெட்டி போன்றோர் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த காங்கிரசாரும் எதிர்த்தனர். சாஸ்திரியும், நந்தாவும் பொறுமை காத்தனர். தமிழகம் முழுதும் இந்தி திணிப்புக்கு எதிரான தீ கொழுந்துவிட்டு எரிந்தது. கோப்புகளின் படி சுமார் 70 பேரும், செய்தித்தாள்களின் படி, சுமார் 500 பேரும் உயிரிழந்தனர். தங்கள் மொழியை விரும்பிப் படிக்க, தங்கள் மொழியை அழிக்க நினைக்கும் ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்க பலர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். நடுவண் அமைச்சரவையில் இருந்த உணவுத்துறை அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்கள் தன் பதவியை விட்டு விலகப் போவதாய் அறிவித்தார். சாஸ்திரி தன் அமைச்சரவையிலெயே ஏற்பட்ட எதிர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர் ஆங்கிலம் நீடிக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டார். 
இந்தியைத் திணிக்க நினைத்த காங்கிரஸ் அரசாங்கம் 1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. அண்ணாதுரை வெற்றிப் பெற்று முதல்வரானார். இன்றுவரை காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. இனிமேலும் பிடிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்திக்கு எதிரான போரா…? 
இந்தி எதிர்ப்பு போர் என்று சில பத்திரிக்கைகளால் வர்ணிக்கப்படும் இந்த போராட்டம் உண்மையில் இந்தி மொழிக்கு எதிர்ப்பான போர் அல்ல. இந்தி மொழியைத் திணிக்க எதிர்ப்பு தெரிவித்து எழுந்த போராட்டம். இந்த இந்தி திணிப்புக்கு எதிரான போர் அவசியமானதா….? இது வெறும் அரசியல் சார்புடையது மட்டுமா…? இந்த கேள்விகள் இன்று நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. அதற்குக் காரணம் நம்மைச் சுற்றியிருக்கும் ஆரிய மாயை. 
“சே… இந்தி படிச்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்…” என்று நம்மில் பலர் புலம்புவதுண்டு. அப்படி அந்த இந்தி படிப்பது அவசியமானதா…?
இந்தி மொழி என்பது ஒரு சிறந்த மொழியாகும். மிகவும் எளிமையான அமைப்பு உடையது. யார் வேண்டுமானாலும் எளிதில் பயின்று கொள்ள முடியும். இந்தியாவில் இன்று பெரும்பான்மையான மக்களால் பேசப்படுவதும், உலகில் சீன மொழிக்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் பேசும் மொழியுமாகும். பல தீஞ்சுவை இலக்கியங்கள் நிரம்பப்பெற்ற மொழியாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து வாழும் மொழியுமாகும். இந்தி மொழியை தமிழன் என்றுமே வெறுப்பதில்லை. அம்மொழி தங்கள் மீது திணிக்கப்படுவதைத் தான் வெறுக்கிறான். மூவாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான பாரம்பரியம் மிக்க தமிழ் மொழியை தங்கள் தாய்மொழியாக வரப்பெற்ற நாம், ஏன் அதை விட்டு வேறு மொழியை கட்டாயத்துக்குட்பட்டு கற்க வேண்டும்…? அவ்வாறு இந்தி மொழி திணிக்கப்படும் போது, நாளைடைவில் தமிழ் மொழியின் சிறப்பு குன்றச்செய்வதே அவர்கள் நோக்கம். இந்திக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் நம் தாய் மொழியை அது சார்ந்த கலாச்சாரத்தை நாம் இழக்க நேரிடலாம்.
ஏற்கனவே இன்னும் 200 ஆண்டுகளில் இந்தியாவில் மிக முக்கிய மொழிகள் பல இல்லாமல் அழிந்து போகும் என்று யுனெஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது. அந்த அழிவின் பட்டியலில் தமிழ் சென்று சேர வேண்டுமா… பலவாறாக நமது முன்னோர்கள் காத்த நமது மொழியையும் கலாச்சாரத்தையும் நாம் இழக்க வேண்டுமா என்ன…? நமது அண்டை மாநிலங்களில் இந்தி மொழி கட்டாயமாக்கப் பட்டதன் விளைவாக அவர்கள் தங்கள் தாய் மொழியை மறந்துவிட்ட கொடுமைகள் இப்போது நடந்துதான் வருகின்றன. பல கோடி தெலுங்கு பேசும் மக்கள், இன்று சில சிறப்பான சொற்பயன்பாடுகளை தங்கள் தாய்மொழியில் இழந்துவருவதாக தாய்மொழிக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், மராட்டிய மாநிலத்திலும், குஜராத் மாநிலத்திலும் தங்கள் தாய்மொழியை விட இந்தி பேசுபவரே அதிகம். மெல்ல மெல்ல அவர்கள் தங்கள் தாய்மொழியை இழக்கின்றனர். 
இன்று ரயில்வே துறை, அஞ்சல் துறை, வங்கித் துறை போன்ற நடுவண் அரசின் துறைகள் இந்தியை மட்டுமே முக்கிய மொழியாக கொண்டு செயல்படுவதால் நம்மவர்கள் அவற்றில் வேலை வாங்குவதும் பதவி உயர்வு வாங்குவதும் கடினமாக ஒன்றாய் மாறிவிடுகிறது. அதைக் கண்டு நாம் “இந்தி படித்திருக்கலாமோ…?” என்று விசனப்படுவதுமுண்டு. இவையெல்லாம் ஆரிய மயக்கத்தின் தற்கால வடிவங்களாகும்.
அஞ்சல் சார்ந்த பல சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் படிவங்களும், கோப்புகளும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருப்பதை நம்மில் பலர் கவனிக்க மறந்திருப்போம். வங்கிகளில் இருக்கும் பல வண்ண சீட்டுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் கடைக்கோடியிலிருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியில் கூட அவ்வாறு தானிருக்கும். ஏனெனில் அஞ்சலகமும், வங்கியும் நடுவண் அரசின் துறைகள். அவர்கள் மறைமுகமாக இந்தியை திணிக்க முயல்கின்றனர். நடுவண் அரசின் போட்டித் தேர்வுகள் பெரும்பாலும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் நடத்தப் படுகின்றன. இவ்வாறு நடத்துவதன் மூலம் இந்தியைத் தாய்மொழியாக கொண்டோர் மட்டும் நிறைய வேலைவாய்ப்பை பெறச்செய்வதில் நடுவண் அரசு மறைமுகமாக ஆரிய மயக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. ஒருவேளை இந்தி மொழியைப் பாடமாக பயின்றிருந்தால் நாமும் அவ்வாறு வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கலாம் என நம்மை நினைக்கத் தூண்டுவதே அவர்களின் முக்கிய குறிக்கோள். அவ்வாறு நினைப்பதன் மூலம், நம் அரசியல்வாதிகள் செய்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை தவறு என சித்தரிக்கும் முயற்சிகள் இவை.
உலகின் 190-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அந்நாடுகளில் எல்லாம் வாழும் மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசவும், எழுதவும் அதையே அலுவல் மொழியாக பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் நிலை சற்று வேறுபட்டது. இங்கு பல மொழிகள் உள்ளன. அவற்றை எல்லாம் அலுவல் மொழியாக ஆக்குவது சற்று கடினம். நடைமுறைச் சிக்கல்கள் உள்ள விஷயமது. ஆனால், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழிகளை எல்லாம் முக்கிய மொழியாக கருதி அவற்றை அலுவல் மொழியாக ஆக்கலாம். சுமார் 25 மொழிகள் அவ்வாறு இந்தியாவில் உள்ளன. அவற்றை அலுவல் மொழியாக மாற்றுவது என்பது கடினமான விஷயமோ, நடைமுறைக்கு உதவாததோ அல்ல. ஆனால் ஆட்சியாளர்கள் அவற்றை செய்வதில்லை. 
அவற்றோடன்றி நாட்டின் மிக முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் யாவும் வட இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலேயே நடத்தப்படுவதைக் காணலாம். தென்னிந்தியா பெரும்பாலும் புறக்கணிக்கப்படும். அதனாலேயே பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களில் தேசிய கட்சிகள் தங்கள் ஆட்சிகளை இழந்து மாநில கட்சிகள் ஆட்சிக் கட்டிலேறின. மாநிலக் கட்சிகளாலேயே அந்த மாநிலங்கள் பெரும்பாலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். அவ்வாறின்றி தேசியக் கட்சி ஆட்சிக்குட்பட்ட கேரள மாநிலம் இன்றும் தொழில்வளர்ச்சியில் மிகவும் பிந்தங்கிய மாநிலமாகவே உள்ளது. தமிழ்நாடு இன்று தொழில் வளர்ச்சியில், மகாராஷ்டிரம், குஜராத்திற்கு அடுத்த மூன்றாவது இடத்திலும், நகரமயமாதலில் முதலிடத்திலும், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாமிடத்திலும், கல்வி வளர்ச்சியில் முதலிடத்திலும் உள்ளது. இவை எல்லாம் நம் மாநிலக்கட்சிகளினால் நடந்தேறியவையே…!
நமது அண்டை நாடான இலங்கையில் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தினாலும், தமிழ் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரில் நான்கு மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. தமிழும் அதில் ஒன்று. மலேய நாட்டில் தமிழ் வழிக் கல்வி என்பது மிகச் சாதாரணமான ஒன்று. தமிழர்கள் மிகச் சிலவாக வாழும் தென்னாப்பிரிக்க குடியரசில் கூட தமிழில் நீங்கள் தேர்வு எழுத முடியும். அப்படியிருக்க, 7 கோடி தமிழர்கள் வாழ்ந்துவரும் தமிழரின் தாய்நிலமான இந்திய தேசத்தில் இன்னும் அந்த முறை ஏற்புடையதாயில்லை நடுவண் ஆட்சியாளர்களுக்கு.

நன்றி :- திரு.கோபி 

5 comments:

  1. நான் மலேசியாவில் பிறந்த தமிழன். எங்கள் நாட்டின் தேசிய மொழி மலாய். நான் தமிழ் பள்ளியில் படித்தேன். மலாய் மற்றும் ஆங்கிலம் எங்கள் நாட்டில் கட்டாயம் கற்க வேண்டிய மொழி.சீனர்கள் சீன பள்ளியில் படித்தாலும் அவர்களும் மலாய் மற்றும் ஆங்கிலம் கட்டாயம் கற்க வேண்டும். ஆக,எங்களுக்கு தாய் மொழி, உலக மொழியாம் ஆங்கிலம் மற்றும் எங்கள் நாட்டு தேசிய மொழி மலாய் ஆகியவை பேசமுடியும் எழுத முடியும் படிக்க முடியும். தமிழ் பள்ளியில் ஒரு பாடமாக மலாய் படித்ததால், நாங்கள் தமிழை மறக்கவில்லை. தமிழுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. அனால், தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இப்படி தமிழுக்கு ஆபத்து, ஆபத்து என்று கூச்சல் போடுகிர்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி ஹிந்தி,தாய் மொழி தமிழ், மற்றும் உலக மொழி ஆங்கிலம் கற்றால், எந்த விதத்தில் குறைந்துவிடுவீர்கள்? உங்களையெல்லாம் இப்படி ஆட்டு மந்தையாக்கிய தலைவர்கள் எல்லாம்,தங்கள் பிள்ளைகளை ஹிந்து படிக்க வைத்து பெரிய பதவியில் அமர வைத்து விட்டார்கள். நீங்கள் மட்டும், சொந்த நாட்டில் வேறு மாநிலத்துக்கு சென்றால், பே! பே! என்று முழிகிரிர்கள். வாழ்க உங்கள் அடிமைத்தனம்!

    ReplyDelete
  2. என் கருத்தை வெளியிட மறுத்த உங்கள் நேர்மைக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. kambathasan உங்கள் இந்து பற்று நன்றாகவே புரியுது ...அங்கிலம் கற்க இங்கு யாரும் தடை சொல்லவில்லை. இந்தி தேசிய மொழி என்பதை அன்றே அண்ணா எதிர்த்தார் ....அதனால்தான் இன்று அங்கிலம் கற்று தமிழன் உலகம் முழுவதும் சென்று வருகிறான் ...ஒரு பாமர தமிழன் அங்கிலம் பேசும் அளவிருக்கு ஒரு மராடியோ ,குஜராதியோ பேச சொல்லுங்க பார்போம் ...

    ReplyDelete
  4. இராஜேந்திர சோழன்December 13, 2011 at 10:20 PM

    kambadasan...2% பேர் வேலைக்கு போவதற்கு மீதி பேர் இந்தி படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தி ப்டிக்காததனால் ஆங்கிலம் படித்து 40% இளைஞர்கள் software engineer ஆகிவிட்டார்கள். லாபம் எங்களுக்கு தான். தமிழ் வாழ்க !

    ReplyDelete