திராவிடம் என்றால் என்ன?
தமிழ் என்றால் என்ன?
பகுதி - 1
## பெரியார் தான் 'தமிழரை' 'திராவிடர்' என்று சொல்லி ஏமாற்றி இன அடையாளத்தை அழித்தாரா? ##
2 பக்க கட்டுரையை கூட முழுதாக படிக்காத சில 'குமாரு' போன்ற இளைஞர்கள், யாரோ சிலர் வரலாற்று திரிபுகளோடு சொல்லும் கருத்தை சரியா தவறா என்று யோசிக்காமல் நம்புகிறார்கள். 'குமாரு' போன்ற இளைஞருக்காக நாம் வரலாறை 1ம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
# பெரியாரால் முதலில் 'திராவிடர்' என்ற பெயர் பயன்படுத்தப்படவில்லை.
* 1881ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தீண்டத்தகாதவர்கள் தங்களை "சாதியில்லா திராவிடர்கள்" என பதிவு செய்து கொள்ளும்படி அயோத்தி தாச பண்டிதர் அறிவிப்பு செய்கிறார்.
(இதை தொடர்ச்சியாக வலியுறுத்தி 1910ம் ஆண்டு கூட வெள்ளையரிடம் மனுகொடுக்கிறார். அந்த மனுவில்,
"இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும், இத்தேசப் பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டும், பூர்வ குடிகளை சாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்திரவளிக்க வேண்டுகிறோம்." - 14- 12- 1910
அயோத்தி தாசரின் இறுதி ஆண்டுகளான 1913, 1914 ஆண்டு கூட 'திராவிடர்' என்ற சொல்லையே பயன்படுத்தி இருக்கிறார். இதனால் இவர் 'திராவிட கருத்தியலின் முன்னோடி' என்றும் கருதப்படுகிறார்)
* 1885 ஆம் ஆண்டு, அயோத்தி தாச பண்டிதர், ஜான் ரத்தினம் அவர்களோடு இணைந்து 'திராவிட பாண்டியன்' என்ற இதழை தொடங்குகிறார்
* 1891ம் ஆண்டு, அயோத்தி தாச பண்டிதர் 'திராவிட மகாஜன சபை'யை நிறுவுகிறார்
* 1892ம் ஆண்டு, ஜான் ரத்தினம் 'திராவிட கழகம்' தொடங்குகிறார்
* 1891 ஆம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் தொடங்கிய 'பறையர் மகா ஜன சபை' 1893 ஆம் ஆண்டு 'ஆதி திராவிட மகா ஜன சபை' என பெயர் மாற்றப்படுகிறது
* 1912ல் நடேசனாரால் ஆரம்பிக்கப்பட்ட 'Madras United League' என்ற பெயரை 1913ம் 'திராவிடர் சங்கம்' என்று அவரே மாற்றி 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்தினார்.
* அதன் பிறகு தான் 1944 ஆம் ஆண்டு பெரியார் 'திராவிடர் கழகம்' தொடங்கினார். (அதுவும் பெரியாருக்கும் முன்பே அவரது தோழர்கள் 'செவ்வாய்பேட்டை திராவிடர் கழகம்' , 'கோவை மாவட்ட திராவிடர் கழகம்' என்று ஆரம்பித்து பெரியார் தலைமையில், அண்ணா கலந்து கொண்ட கூட்டங்கள் நடத்தியதெல்லாம் வரலாறு)
அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல் வரலாற்றில் தன் சுயமரியாதை மீட்கவும், சமூக நீதிக்காக போராடிய இயக்கத்தின் தொடர்ச்சியாக பெரியாரும் 'திராவிடர்' என்ற பெயர் நியாயமானதாகவும் தேவையானதாகவும் அமைவதால் 'திராவிடர் கழகம்' என்று தன் இயக்கத்திற்கு பெயர் வைக்கிறார்.
இவையெல்லாம் தெரியாமல் 'திராவிடம்' என்று சொல்லை பெரியார் தான் திணித்தார். அவர் தான் உபயோகித்தார்.. அவர் தமிழர் என்ற வார்த்தையை இருட்டடிப்பு செய்துவிட்டார் என்றெல்லாம் புலம்புவது அறியாமை..
#####
திராவிடம் என்றால் என்ன? தமிழ் என்றால் என்ன? இரண்டுக்குமான தொடர்பு என்ன? இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?
திராவிடம் இன அடையாளத்தை அழித்ததா? இனத்தின் சுய மரியாதையை மீட்டதா?
அடுத்தடுத்த பதிவில் வரலாற்று தரவுகளோடு சொல்றேன் குமாரு...
பகுதி - 2
## திராவிடம் என்றால் என்ன? தமிழ் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா? இரண்டுக்குமான தொடர்பு என்ன? ##
'திராவிடம்' என்பதற்கு ஆய்வாளர்கள் பலர் பல கோணங்களின் தனது ஆராய்ச்சி முடிவை தருகிறார்கள். இருப்பினும் அந்த முடிவுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும், ஒரு புள்ளியில் இணைவதை பார்க்கிறோம். அவைகளை தொகுத்தால், 'திராவிடம்' என்னும் வார்த்தை மூன்று நிலைகளில் ஆளப்படுகிறது.
திராவிடம் என்பது,
அ. தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல்
ஆ. தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு
இ. பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கான எதிர்ச் சொல்
அ. தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல்
1. 'தமிழ்' என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு, 'தமிதா' என்றும் 'தமிளா' என்றும் உருமாறி பிறகு 'திராவிட' மாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி 'தமிழ்' அல்லது 'திராவிடம்' என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அன்று; ஆரியர்கள் வருமுன் தமிழ் மொழி இந்திய துணைக்கண்டம் முழுவதும் பேசப்பட்ட மொழி. தமிழ், காஷ்மீரத்தில் இருந்து குமரி வரையில் பேசப்பட்ட மொழி. - பாபா சாகேப் அம்பேத்கர்.
'பாபா சாகேப்' 'தமிழ்' என்ற வார்த்தை தான் சமஸ்கிருதத்தில் 'திராவிடம்' என்று உச்சரிப்படுவதாக குறிப்பிடுகிறார்.
2. தமிழம் என்பது திராவிடம் என்பதன் திரிபுச்சொல்லே - பாவாணர்
பண்டைய காலத்தில் நாட்டுப்பெயர்கள் 'அம்' ஈறு பெற்றே வழங்கி வந்தன. (எ.கா) சிங்களம், கடாரம், ஆரியம், மராட்டியம், வங்காளம், அராபியம் இவ்வகையிலேயே தமிழம் என்று வழங்கப்பட்டது.
ஒரு சொல்லின் முதலெழுத்து உயிர்மெய் எழுத்தாக இருந்தால், அதிலுள்ள உயிரெழுத்தை நீக்கி, மெய்யாக நிறுத்தி, அதையடுத்து 'ர' என்னும் எழுத்தை சேர்த்துக் கொள்வது ஒருவகை திரிபு முறை.
படி (copy) என்ற சொல்லில் உள்ள 'ப' என்ற உயிர் மெய் எழுத்தில், 'அ' என்னும் உயிரெழுத்தை நீக்கி, 'ப்' மெய் எழுத்தை நிறுத்தி, 'ர' எழுத்தை சேர்த்தால் 'ப்ரடி' 'ப்ரதி' 'பிரதி' என்று வடமொழியில் மாறும்.
பவளம் - ப்ரவளம் - பிரவாளம்
மதங்கம் - ம்ரதங்கம் - மிர்தங்கம் - மிருதங்கம்
தமிழம் - த்ரமிளம் என்று திரிந்தது இயல்பே. பின்பு நாளடைவில் 'த்ரமிடம்' என்று திரிந்து 'திரவிடம்' என்றாகித் 'திராவிடம்' என்று நீண்டது என்று பாவாணர் விளக்குகிறார்.
* 'திராவிடம்' தமிழை இருட்டடிப்பு செய்தது என்று சொல்பவர்களால் தான் 'திராவிட மொழி ஞாயிறு' பாவாணர் என்பவர் இருட்டடிப்பு செய்யப்பட்டு வெறும் 'மொழிஞாயிறு பாவாணர்' என்றே அழைக்கப்படுகிறார் smile emoticon
3. "திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல். சமற்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை, திராவிடரும் இல்லை. ஆனால் சமற்கிருதம் நீக்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியே" என்றும் "ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் 'த்ரமிளர்' என்றழைக்கப்பட்டு 'த்ரவிடர்' என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்றுள்ளது" என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
பெரியார் துரோகம் இழைத்தார் என்றால் பெரியார் சொல்வதை ஏற்க வேண்டாம். தமிழறிஞர் பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோர் திராவிடம் குறித்து என்ன சொன்னார்கள் என்று படிக்கலாமே!
அவர்களைப் படித்தாலே 'திராவிடம்' 'தமிழ்' இவற்றிலுள்ள குழப்பம் தீரும். இவர்கள் யாரையுமே படிக்கவில்லை என்பது தான் இங்கு வருத்தமான செய்தி.
ஒரு பெயர் மற்ற மொழியாரால் பயன்படுத்தப்படும் போது அவர்களுடைய இலக்கணப்படியோ, அல்லது வழக்காற்றிலோ திரிவது இயல்பே.
நமக்கு தெரிந்தே ஆண்டனி (Antony) என்ற பெயர் நம்மால் 'அந்தோணி' என்று சொல்லப்படவில்லையா? ரஷ்யா (Russia) 'உருடியா' என்று மாற்றப்படுவதில்லையா?
4. தமிழரின் நாகரிகத்தை எழுத்தை ஆராய்ந்த ஈராஸ் பாதிரியார் தமிழ் எழுத்துக்கள் மற்ற தொன்மை நாகரிக எழுத்துக்களுடன் ஒன்றிணைந்திருப்பதை கண்டறிந்தார். தமிழின், திராவிடத்தின் தொன்மையை அறிந்த அவர், தான் 'ஸ்பெயினில் உள்ள திராவிடன்' (I am Dravidian from Spain) என்று அறிவித்துக்கொண்டார்
5. வடமொழி இலக்கியங்களில் 'தமிழ்' என்பதற்கு 'திராவிடம்' என்றே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது தென்னிந்தியர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, 10ம் அத்தியாயத்தில், 43,44 வது ஸ்லோகத்தில், திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, "சாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்கு பிறந்தவர்கள் திராவிடர்கள்.. திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள்" என்கிறது மனுஸ்மிருதி.
* கி.பி. 7ம் நூற்றாண்டில், குமரிலப்பட்டர் 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்தினார்
* கி.பி. 470இல் சமணத்தின் மையமாக மதுரை திகழ்ந்த போது, பூச்சியநாதரின் சீடரான வச்சிர நந்தி என்பார் 'த்ரமிள சங்கம்' நிறுவினார்.
* கி.பி 17ம் நூற்றாண்டில், தாயுமானவர் "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்" என்று படித்தவர்களின் போலியை நகைக்கிறார். அதில், "படித்தவர்கள் தமக்கு எல்லாம் தெரியும் போல காட்டிக்கொள்வார்கள். தமிழ் தெரிந்தவரிடம் தமக்கு வடமொழி தெரியும் என்பார்கள். வடமொழிப் பண்டிதர் எதிரில் வந்தால், தமக்கு திராவிடமும் தெரியும் என்பார்கள்" என்று கூறுகிறார்.
'தமிழ் மொழியும் தெரியும்' என்று சொல்வதற்கு பதிலாக 'திராவிடமும்' தெரியும் என்று தான் பயன்படுத்துகிறார்.
* திருஞான சம்பந்தர் 'திராவிட சிசு' என்றே அழைக்கப்பட்டார்.
#####
இதிலிருந்து 'தமிழம்' / 'தமிழ்' என்ற சொல்லே வட மொழியில் 'திராவிடம்' என்றானது. திராவிடம் என்ற தனித்த மொழியோ, இனமோ இல்லை. 'தமிழ்' தான் 'திராவிடம்'. 'திராவிடம்' தான் 'தமிழ்' - 'தமிழரை'த் தான் 'திராவிடர்' என்று குறித்தார்கள் என்று அறிய முடிகிறது.
'திராவிடம்' என்றால் என்ன என்று சிலரை கேட்டால் 'அது தெலுங்கரை குறிக்கும் சொல்' என்று சொல்கிறார்கள். (அவர்கள் தமிழ் மொழியின் அடிப்படை வரலாறு கூட தெரியாத பச்சிளம் குழந்தைகள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது). அவர்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது.
தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு திராவிடம் என்று அழைப்பதன் பின்புலமும், எவ்வாறு பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கான எதிர்ச் சொல்லாக மாறியது என்பதை இதே பதிவில் எழுதினால் பதிவு நீளும் என்பதால் அடுத்த பதிவுகளில் பார்ப்போம். smile emoticon
பகுதி - 3
## 'தமிழ்' தான் 'திராவிடம்' என்றால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் திராவிடம் இல்லையா?
ஆ. தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு
தமிழ் மொழியின் அடிப்படை வரலாறு தெரிந்தவர்கள், தமிழ் தான் தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு மூத்த மொழி என்பதை மறுக்க முடியாது. நேரடியாக சொல்வதானால் 'தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை தமிழ் மொழிக்குடும்பம்' என்று சொல்லலாம். நாம் முன்னர் பார்த்தது போல், 'தமிழ்' தான் 'திராவிடம்' என்றால் அதை 'திராவிட மொழிக்குடும்பம்' என்றும் அழைக்கலாம்.
தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழரிலிருந்து பிரிந்தவர்கள் தான், அவர்களின் மொழி நம் தமிழ் மொழியிலிருந்து தான் பிரிந்தது என்பதை நாம் ஏற்றுக்கொண்டால், நாம் மேலெ சொன்ன 'திராவிடம்' விளக்கத்தின் படி அவர்களும் 'திராவிடரிலிருந்து (தமிழரில்)' பிரிந்தவர்கள். 'திராவிட (தமிழ்) மொழி' யிலிருந்து பிரிந்தவர்கள்.
ஆனால் கால்ட்வெல் 'தென்னிந்திய / திராவிட மொழிக்குடும்பம்' என்பதை இதே பொருளில் கூறவில்லை என்பதை கவனிக்க. இந்த (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு) மொழிகளுக்கு மூத்த மொழி (Proto Dravidian) ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். அதை கண்டறிய முடியாததால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, துளு ஆகியவைகளை சேர்த்து 'திராவிட மொழிக்குடும்பம்' என்று கூறுகிறார்.
இங்கு தான் நாம் குழப்பத்தில் நிற்கிறோம். கால்ட்வெல்லின் 'திராவிட மொழி ஒப்பிலக்கணமும்', தமிழறிஞரின் ஆய்வையும் வேறு வேறு தளத்தில் வைத்து ஆராய்ந்தால் அதில் உள்ள சிறிய அளவில் முரண்பாடுகளும் பெரிய ஒற்றுமையையும் காண முடியும்.
சுருக்கமாக சொன்னால், கால்ட்வெல் வரையறையில் 'திராவிடம்' என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவற்றின் கூட்டாக கருதினார். அதில் 'தமிழ்' தான் மூத்த மொழி என்றார். தமிழறிஞர்கள் 'தமிழ்' தான் 'தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு' ஆகியவற்றுக்கான மூல மொழி" என்று கருதுகிறார்கள்
( இந்த இடத்தில் அயோத்தி தாச பண்டிதர், தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்க 'ஆதி (மூல) திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்தியதை நினைவு கூர்க ).
** ஆக, 'தமிழி' தான் 'திராவிட'மாகவும் 'தமிழர்'தான் 'திராவிடரா'கவும் குறிக்கப்பட்டது போல தமிழிலிருந்து பிரிந்த தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளின் குடும்பம் திராவிட (தமிழ்) குடும்பம் என்றும் தெலுங்கர், மலையாளி, கன்னடர் 'திராவிடர்' என்றும் குறிக்கப்படுகிறார்கள்.
** தமிழ்நாடு, கேரளத்தின் மலபார்ப் பகுதி, இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை ஒன்றாக சேர்ந்து 'சென்னை மாகாண'மாக இருந்த போது (1956 முன்பு வரை) இந்தியாவிலிருந்து தனிநாடாக 'திராவிடஸ்தான்' என்றும் 'திராவிட நாடு' என்றும் கோரிக்கை விடுத்த பெரியார் தான், 1956க்கு பிறகு மொழிவாரி மாகாணமாக 'இப்போதுள்ள தமிழ் நாடு' பிரிக்கப்பட்ட பிறகு 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று தான் தனிநாடு கோரிக்கை விடுத்தார்.
இ. பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கான எதிர்ச்சொல்
'தமிழ்' என்பதற்கு 'திராவிடம்' என்ற சொல்லும் வரலாறு நெடிங்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை பார்த்தோம். ஒடுக்கு முறைக்கு எதிரான 'உரிமை' முழக்கமாக 'திராவிடம்' என்ற பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் பெரியாருக்கு முன்பே, 'திராவிட மகாஜன சபை', 'ஆதி திராவிட மகா ஜன சபை', 'திராவிடர் சங்கம்' உருவானது.
1. (தென்னிந்தியாவில்) ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. இந்த வேறுபாட்டை நாம் எண்ணிப்பார்த்தால் தென்னிந்தியாவில் வாழும் மக்களை மட்டுமே குறிப்பிட, ஏன் 'திராவிடர்' என்ற பெயரைப் பயன்படுத்தத் துவங்கினார்கள் என்பது புரியும். - பாபா சாகேப் அம்பேத்கர்
2. தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் மற்றும் அவரது மகா ஜன சபையின் 6 உறுப்பினர்களும் அன்றைய தலைமை ஆளுனர்(கவர்னர் ஜெனரல்) எல்ஜின் பிரபுவை சந்தித்த போது பேசியதை தனது 'ஜீவிய சரித்திரச் சுருக்க' த்தில் குறிப்பிடுகிறார்.
அதில், "எல்ஜின் பிரபு.. பறையர்,பஞ்சமர், தாழ்த்தப்பட்டோர் என்று பல பேரால் அழைக்கப்பட்டு வந்து இப்போது ஆதி திராவிடர் என வழங்கும் சமூகத்தவர்களுக்கு, இதர சமூகத்தவர்கள் போல் அரசாங்க காரிய நிர்வாகத்திலும், பரிபாலன நிறைவேற்றத்திலும், இராஜிய வியவகார மந்திரி பதவியிலும் பங்கு பெரும் உரிமை உண்டாகி இருக்கின்றது" என்று ஆதி திராவிடர் என்ற சொல் கௌரவமான வரலாற்றில் மூத்த குடிகள் என்ற பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். ஆனால் பெரியார் தான் 'ஆதி திராவிடர்' என்ற பெயரை தொன்மக்களுக்கு திணித்தார் என்று வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்.
** இந்த இடத்தில் நம்ம குமாருக்கு ஒரு செய்தியை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன. என்னவென்றால், தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் வரலாற்று ஆதாரத்தோடும் முந்தைய பதிவில் அயோத்தி தாசர் அவர்களின் வரலாற்று ஆதாரத்தோடும் பார்த்தால் 'ஆதி திராவிடர்' என்ற அடையாளத்தை பூர்வகுடி மக்களுக்கு பெரியார் திணிக்கவில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தொன்மையின் அடையாளத்தை குறிக்கவும், பண்பாட்டின் மீட்சி சொல்லாகவும் 'ஆதி திராவிடர்' (திராவிடர்களில் தொன்மையானர்கள்) என்னும் சொல்லை அவர்களாகவே பயன்படுத்திக்கொண்டனர்.
'ஆதி திராவிடர்' என்ற சொல்லை தொன்மை தமிழருக்கு பெரியார் கொடுத்துவிட்டதால், 'ஆதி தமிழர்' என்ற நம் அடையாளத்தை 'வந்தேறி தெலுங்கு அருந்ததிய மக்கள்' அபகரித்துவிட்டனர் என்று பேசுவது எவ்வளவு பெரிய விஷமத்தனமான பொய் என்பது இதிலிலிருந்து புரியுதா குமாரு?
இனியாவது, உழைக்கும் மக்களான பள்ளர், பறையர் சமூகத்தினருக்கு எதிராக அருந்ததிய சமூகத்தினரை எதிரிகள் போல் சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும். வரலாற்று உண்மையறியாத நம் இளைஞர்களோ இந்த விஷமக்கருத்துக்கு ஆட்படுகின்றனர் என்பது வருத்தமான செய்தி.
###########
இல.வேந்தன்.